உத்தரகண்ட்டில் அடுத்தடுத்து மேக வெடிப்பு.. நள்ளிரவில் பல வீடுகள் தரைமட்டம்.. என்ன நடந்தது?
வட இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாகக் கொட்டிய கனமழையில் பலர் மாயமாகியுள்ளனர். அங்குக் கனமழை தொடர்வதால் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதில் சிக்கல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய நேரத்தில் அங்குப் பெய்த இந்தக் கனமழையால் 10 பேர் மாயமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கனமழை மற்றும் வெள்ளத்தால் அங்கிருந்த ஆறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகிவிட்டன. உத்தரகண்ட் பகுதியில் அமைந்துள்ள நந்தா நகரில் கடந்த புதன்கிழமை இரவு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இடிபாடுகளில் இருந்து இரண்டு பேர் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
எச்சரிக்கை
பாதிக்கப்பட்ட பகுதிக்கு மருத்துவக் குழுவும், மூன்று ஆம்புலன்ஸ்களும் விரைந்துள்ளன. இருப்பினும், வானிலை அங்குத் தொடர்ந்து மோசமாக இருப்பதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மழையும் இப்போதைக்கு முடிவது போலத் தெரியவில்லை. சாமோலியில் வரும் நாட்களிலும் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மீட்புப் பணிகளை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், மேக வெடிப்பு காரணமாகப் பலரும் தங்கள் வீடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
What's Your Reaction?



