2026 T20 உலக கிண்ணம் குறித்து ICC விளக்கம்.
2026 T20 World Cup:
வழமை போல் இந்தியாவும் - பாகிஸ்தானும் குடுமிப்பிடி சண்டையில்!!
"இரண்டு நாடுகளுக்கும் Final வந்தால் கொழும்பில் தான் போட்டி நடக்கும்"
டி20 உலகக் கிண்ணம் குறித்து ICC விளக்கம்!
இலங்கை மற்றும் இந்தியா இணைந்து அடுத்த ஆண்டு நடத்தும் ஆடவர் இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித்
தொடரின் ஆயத்தங்கள் குறித்து ஐசிசி (ICC) தெளிவுபடுத்தியுள்ளது.
அதன்படி, போட்டித் தொடரின் இந்தியாவில் நடைபெறவுள்ள போட்டிகள் அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட உள்ளன.
அதேவேளை, இலங்கையில் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படாவிட்டாலும், அதற்காக கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மற்றும் பல்லேகலை மைதானங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதிப் போட்டி மார்ச் 8ஆம் திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
எனினும், இந்திய கிரிக்கெட் சபைக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கும் இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின்படி, அவர்கள் ஒரு நாட்டிற்கு விருந்தளிக்கும் போது நடுநிலையான இடத்தில் விளையாடுவார்கள்.
இதனால், பாகிஸ்தான் அணி தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையில் விளையாடும்.
அவர்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், அந்தப் போட்டியும் இலங்கையிலேயே நடைபெறும்.
ஐசிசியின் அளவுகோல்களின்படி, போட்டித் தொடர் ஆரம்பிப்பதற்கு 3 மாதங்களுக்கு முன்னர் போட்டி அட்டவணை வெளியிடப்பட வேண்டும்.
அதன்படி, அது பெரும்பாலும் வரும் வாரத்தில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.
இந்த முறை போட்டித் தொடரில் 20 அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், அவை 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விளையாடும்.
ஒவ்வொரு குழுவிலும் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
அங்கு, அவை தலா 4 அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விளையாடும். அதில், இரண்டு குழுக்களிலும் முன்னிலை வகிக்கும் இரண்டு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
விருந்தோம்பும் நாடுகளான இந்தியா மற்றும் இலங்கை ஆகியவற்றுடன், ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நேபாளம், ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம், நமீபியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகள் இப்போட்டித் தொடருக்குத் தகுதி பெற்றுள்ளன
By: ANM Fawmy ( Journalist )
What's Your Reaction?



