தோல்விகள் இல்லாத தொடரின் வெற்றி சாதனை!
இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மற்றொரு உலகக்கோப்பை வெற்றி சேர்ந்துள்ளது. கண்பார்வையற்றோருக்கான முதலாவது மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய அணி நேபாளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் உலக சாம்பியன் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
115 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. வெறும் 12.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டிப்பிடித்தது. இன்னும் 47 பந்து மீதமிருந்த நிலையிலேயே இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் குலா ஷரீர் . இவர் 27 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் இந்திய அணியின் செயல்பாடு வியக்கத்தக்க வகையில் இருந்தது. லீக் சுற்றுகளில் இலங்கை, ஆஸ்திரேலியா, நேபாளம், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அனைத்து அணிகளையும் வீழ்த்தியது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அரையிறுதியில் மீண்டும் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
சமீபத்தில்தான் நவி மும்பையில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றிருந்தது. அந்த வெற்றி கிடைத்து மூன்று வாரங்களே ஆன நிலையில், தற்போது கண்பார்வையற்றோர் அணியும் உலகக் கோப்பையை வென்றுள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட்டின் உச்சமாக அமைந்துள்ளது.
இந்தத் தொடர் முழுவதும் ஒரு தோல்வியைக்கூட சந்திக்காமல், அசைக்க முடியாத அணியாக வலம் வந்த இந்திய மகளிர் கண்பார்வையற்றோர் அணி, இறுதிப் போட்டியிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வெற்றி பெற்றது.
What's Your Reaction?



