கொட்டகலை கொமர்சல் தகனசாலையில் இடம்பெறும் ஊழல் வெளிச்சத்துக்கு!
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பிரேத தகனசாலையில் தகனத்துக்காக அறவிடப்படும் கட்டனத்தில் கடந்த ஆறு வருடங்களாக பாரிய மோசடி இடம்பெற்றுவருவதாகவும் இந்த மோசடி தொடர்பில் உரிய சட்ட விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலத்தில் எரிவாயு தட்டுப்பாட்டின் போது அதிகரிக்கப்பட்ட தகனத்துக்கான கட்டணம், பின்னர் எரிவாயுவின் விலை பாரியளவில் குறைந்த போதும் அந்த கட்டணம் குறைக்கப்படாது கொட்டகலை மக்களுக்கு பிரதேச சபையின் நிர்வாகம் பெரும் துரோகம் இழைத்துள்ளதாகவும் ,ஆகவே இனியும் காலம் தாழ்த்தாது, இதுவொரு மனித இனத்துக்கு செய்யும் மனிதாபிமான செயற்பாடு என்ற அடிப்படையில் விரைவில் கட்டணத்தை குறைப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினரும் கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்க தலைவருமான புஷ்பா விஸ்வநாதன்,தேசிய மக்கள் சக்தியின் கொட்டகலை பிரதேச சபையின் உப தவிசாளர் ஜேசுதாசன் யாகுலமேரி, உறுப்பினர் ஜி.இராஜேந்திரன் ஆகியோர் கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினரும் கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்க தலைவருமான புஷ்பா விஸ்வநாதன் கருத்து தெரிவிக்கையில்;
நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் எரிவாயு விலை இரண்டு - மூன்று மடங்காக அதிகரித்திருந்தது. இந்த காலகட்டத்தில் பிரேதங்களை எரிப்பதற்கான கட்டணம் கொட்டகலை பிரதேச சபையினால் அதிகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் மெல்ல மெல்ல குறையத்தொடங்கிய நேரத்தில் எரிவாயு விலையும் படிப்படியாக குறைந்த போதிலும் பிரேதங்களை எரிப்பதற்காக அதிகரிக்கப்பட்டிருந்த கட்டணம் குறைக்கப்படாது இருந்துவந்தது. நான் பிரதேச சபைக்கு தெரிவாவதற்கு முன்னரிலிருந்தே குறித்த கட்டணத்தை குறைக்குமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்து வந்திருக்கிறேன். ஆனால்,அந்த கோரிக்கைகள் எதுவும் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில், பிரதேச சபைக்கு நான் தெரிவான கையோடு கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி சபையின் மாதாந்த கூட்டத்தில் குறித்த விவகாரம் தொடர்பில் ஒரு பிரேரணையை கொண்டுவந்திருந்தேன். மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட மக்களுக்கு 23 ஆயிரம் ரூபாவும் வெளிநபர்களுக்கு 25 ஆயிரம் ரூபாவும் பிரேதங்களை எரிப்பதற்கான கட்டணமாக பிரதேச சபையால் அறவிடப்பட்டு வருகிறது. எனவே எரிவாயு விலை குறைந்திருக்கும் நிலையில் இந்த கட்டணத்தை உடனடியாக குறைக்கவேண்டும் என பிரேரணையை கொண்டுவந்து பேசினேன். அதன் பின்னரும் கட்டணத்தை குறைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான் முன்வைத்த பிரேரணைக்கு பதிலளித்த தலைவர், 'ஒரு பிரேதத்தை எரிப்பதற்கு.37.5 கிலோ உடைய ஒன்றரை சிலிண்டர் தேவைப்படுகிறது என்றும் அதனால் கட்டணத்தை குறைக்கமுடியாது' எனவும் பதில் வழங்கியிருந்தார். அடுத்த கூட்டத்திலும் குறித்த கட்டணத்தை குறைத்து தாருங்கள் என நான் கோரிக்கை விடுத்த அதேவேளை, மலையகத்தின் ஏனைய பிரதேசங்களிலுள்ள தகனசாலைகளில் மிகவும் குறைந்த கட்டணத்தை வசூலிப்பதை சுட்டிக்காட்டியதோடு, கொட்டகலை பிரதேசத்தில் மாத்திரம் தான் அதிகளவான கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கட்டண பட்டியலுடன் எடுத்துக்கூறினேன். இந்த பணி இலாப நோக்கத்துடன் செய்யும் பணி அல்ல, இதுவொரு மனித இனத்துக்கு செய்யும் மனிதாபிமான செயற்பாடாகும் எனவும் எடுத்துக்கூறியிருந்தேன். ஆனால்,எம்முடைய கருத்துக்களை கவனத்திலெடுக்காது,தாங்கள் செய்வது சரியான செயற்பாடு என வாதம் செய்தார்கள்.
இந்நிலையில்தான் நானும், கொட்டகலை பிரதேச சபையின் உப தவிசாளர் ஜேசுதாசன் யாகுலமேரி அவர்களும் உறுப்பினர் ஜி.இராஜேந்திரனும் கொட்டகலை தகனசாலைக்கு நேரடி கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அதேவேளை, எரிக்கப்படும் பிரேதங்களுக்கு செலவாகும் எரிவாயுவின் அளவை கணிப்பதற்காக ஒரு டிஜிட்டல் அளவையையும் கொண்டு சென்றிருந்தோம். காலை முதல் மாலை வரை அங்கு நின்று அனைத்து செயற்பாடுகளையும் கண்காணித்திருந்தோம். அவ்வேளையில்,மூன்று பிரேதங்கள் தகனத்துக்காக வந்திருந்தன. அதற்கமைய அங்கு எரிக்கப்பட்ட பிரேதங்களுக்கு செலவான எரிவாயுவின் அளவினை அந்த டிஜிட்டல் அளவையூடாக அளந்து பார்த்தோம். அதற்கமைய இரண்டு பிரேதங்கள் எரிந்து முடிவதற்கு சராசரியாக 53.8 கிலோ எரிவாயு செலவாகியிருந்ததை கணிக்க முடிந்தது. ஆகவே ஒரு பிரேதத்தை எரிப்பதற்கு சராசரியாக 10000.00 ரூபாவிக்கு குறைவான பெறுமதியான எரிவாயுவே செலவாகிறது.அதன் அடிப்படையில் ஒரு பிரேதத்தை எரிப்பதற்கான அனைத்து செலவுகளையும் கணித்து பார்த்தால் 15 ஆயிரம் ரூபாவுக்கு மேல் அறவிட வேண்டிய தேவை இல்லை.
அந்த அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு முதல் ஒரு பிரேதத்தை எரிப்பதற்கு 23 ஆயிரம் ரூபாவும் 25 ஆயிரம் ரூபாவும் அறவிடப்பட்டு வந்திருப்பதை பெரும் கொள்ளையாகவே நாங்கள் பார்க்கிறோம். பொதுமக்களிடமிருந்து இத்தனை ஆண்டுகளாக கொள்ளையடிக்கப்பட்டிருந்த பணம் எங்கு சென்றது என்பதை ஆராயவேண்டிய தேவை தற்சமயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே இனியும் காலம் தாழ்த்தாது மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை நிறுத்தி மனிதாபிமான அடிப்படையில் இந்த கட்டண குறைப்பை அவசரமாக நடைமுறைப்படுத்தவேண்டுமென நான் அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை வைக்கின்றேன்.அத்துடன் இதுவரை காலமும் நடந்த இந்த கொள்ளை சம்பவத்துக்கு சட்டரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கின்றேன்.
What's Your Reaction?



