பெருந்தோட்ட பிரதி அமைச்சரின் விஷேட அறிவிப்பு!
நாட்டில் நிலவும் தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக உயிர் நீத்த உறவுகளுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, அனர்த்தத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவாக குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்தித்துக்கொள்வதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சீரற்ற காலநிலையின் போது இலங்கையில் வாழும் அனைவரும் மிகவும் பாதுகாப்பாகவும் அவதானமாகவும் இருக்குமாறும் கேட்டுக் கொள்வதோடு தூரப் பிரயாணங்கள், நிகழ்வுகள், நீர்நிலைகளுக்கு நீராடச் செல்லுதல் மற்றும் ஆபத்தான இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் மிக வினயமாகக் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். தயவு செய்து உங்களது உடைமைகளைப் பாதுகாப்பதற்காக பெறுமதியான உங்களது உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதியமைச்சர் அவர்கள் இச் சீரற்ற காலநிலை தொடர்பாக இன்றைய தினம் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சிலே அமைச்சின் செயலாளர்கள், அமைச்சின் அதிகாரிகளுடன் அவசர கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டதோடு அனர்த்தத்திற்கு உட்படும் குடும்பங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உரிய பணிகளை மேற்கொள்ளல், ஆபத்தான மரங்களை அகற்றுதல், தோட்ட நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுத்தல் போன்றன தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தி முறையான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
பெருந்தோட்டப் பகுதியில் நிலவும் ஏதேனும் அசாதாரண சூழ்நிலையின் போது எமது (PCCF) உத்தியோகத்தர்கள் எந்நேரமும் ஆயத்தமாக இருப்பதோடு எமது அமைச்சின் 0703280729 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என பிரதி அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு அனைத்து விதமான அனர்த்த நிலைமையை தெரிவிப்பதற்கான துரித தொலைபேசி இலக்கம் 117 உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆர். அஜித்குமார்
பிரதி அமைச்சரின்
ஊடக செயலாளர்
What's Your Reaction?



