வெள்ளம் மற்றும் மின்வெட்டால் பழுதடைந்த 12,000 கிலோகிராம் இறைச்சி பறிமுதல்:
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் சேமிக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்குத் தகுதியற்றது எனக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இன்று (டிசம்பர் 8) பொதுச் சுகாதார பரிசோதகர்களால் சீல் வைக்கப்பட்டுள்ளது என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தொடர்ச்சியான கனமழையால் பண்ணைக்குள் வெள்ளநீர் நுழைந்ததுடன், நீண்ட மின்வெட்டுகள் காரணமாக குளிரூட்டும் வசதிகள் செயல் இழந்ததால், குளிர்ச்சியின்றி இருந்த இறைச்சி முழுமையாக கெட்டுப்போனது என ஆரம்பக்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அனர்த்த முகாமைத்துவ அவசர தொலைபேசி இலக்கம் 1926 வழியாக பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து PHI அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, இறைச்சி இருப்புகளை ஆய்வு செய்து, உடனடியாக முழு பண்ணையையும் சீல் செய்தனர் என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் பிரதீப் போரலேச தெரிவித்துள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்ட இறைச்சியின் மாதிரிகள் இன்று (8) அரசாங்க ஆய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட உள்ளன. ஆய்வின் முடிவின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
பொதுமக்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தொடர்ச்சியான கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும், வெள்ளம் மற்றும் மின்வெட்டு காலங்களில் இறைச்சி மற்றும் குளிர்சாதனப் பொருட்கள் தொடர்பாக வணிகர்கள் அதிக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்
What's Your Reaction?



